முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்தது ஆயுஷ்மான் பாரத்! தமிழக மக்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் மருத்துவப் பாதுகாப்பு.
தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 11.01.2027 முதல் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிப்பதற்கும், புதிய காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கும் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநில அதிகாரம் பெற்ற குழுவில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநரும் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுகாதாரம், நிதி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இடம்பெற்றுள்ள 13 பேர் கொண்ட குழு, திட்டத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளது.
இந்தத் திட்ட ஒருங்கிணைப்பின் மூலம் தகுதியுள்ள தமிழகக் குடும்பங்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரிய நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இலவச மருத்துவ உதவி தொடர்ந்து கிடைப்பது பொதுமக்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய உறுப்பினர் சேர்க்கையால் திட்டத்தின் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படும் எனக் கூறப்படுகிறது.
புதிய காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பின்னர், திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply